Monday, November 24, 2008

இதயமில்லாமல் 118 நாட்கள்

செய்தி :

மியாமி: அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், இதயம் இல்லாமல் 118 நாட்கள் வாழ்ந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

இதயத்திற்குப் பதில் அவருக்கு செயற்கையாக ரத்தத்தை பம்ப் செய்து அனுப்பும் சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. இந்த சாதனத்துடன் அவர் 118 நாட்கள் (4 மாதங்கள்) வாழ்ந்துள்ளார்.

அந்த சாதனைச் சிறுமியின் பெயர் டிஸானா சிம்மன்ஸ் ( D'Zhana Simmons). இதற்கு முன்பு, ஜெர்மனியில் ஒரு நபர், செயற்கை ரத்த சுத்திகரிப்பு சாதனத்துடன் 9 மாதங்கள் வாழ்ந்துள்ளார். ஆனால் ஒரு சிறுமி இயற்கையான இதயம் இல்லாமல், இத்தனை நாட்கள் வாழ்ந்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

தெற்கு கரோலினாவைச் சேர்ந்தவர் சிம்மன்ஸ். தனது இதயமற்ற இந்த அனுபவம் குறித்து சிம்மன்ஸ் கூறுகையில், மிகவும் பயமாக இருந்தது இந்த அனுபவம். எப்போது அந்த சாதனம் செயல்படாமல் போகுமோ, நமது உயிர் போகுமோ என்ற பயத்துடன் இருந்தேன் என்றார் சிம்மன்ஸ்.

சிம்மன்ஸுக்கு டைலேட்டட் கார்டியோமயாபதி என்ற இதயக் கோளாறு ஏற்பட்டது. இந்த நோயாளிகளுக்கு, இதயம் பலவீனமாகி விடும். ரத்தத்தை வழக்கமான அளவில் பம்ப் செய்யும் தன்மையை இதயம் இழந்து விடும். வழக்கமான அளவில் சுருங்கி விரியாது.

கடந்த ஜூலை 2ம் தேதி மியாமியில் உள்ள ஹோல்ட்ஸ் குழந்தைகள் மருத்துவமனையில் சிம்மன்ஸுக்கு இதயமாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் புதிதாக பொருத்தப்பட்ட இதயம் செயலிழந்து விட்டது. இதையடுத்து உடனடியாக அந்த இதயம் அகற்ற்பட்டது.

அதன் பின்னர் கலிபோர்னியாவைச் சேர்ந்த தொராடெக் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் தயாரித்த இரு செயற்கை இதய பம்புகள் சிம்மன்ஸுக்குப் பொருத்தப்பட்டன. இந்த செயற்கை இதயத்துடன்தான் இத்தனை காலம் அவர் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில், அக்டோபர் 29ம் தேதி சிம்மன்ஸுக்கு வேறு ஒரு இதயம் பொருத்தப்பட்டது.

செயற்கை இதய பம்புகள் பொருத்தப்பட்ட காலத்தில் சிம்மன்ஸால் நடமாட முடிந்தது. ஆனால் அவர் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டிருந்தார்.

செயற்கை பம்புகள் பொருத்தப்பட்ட போதிலும், அவரது இதயம் உடலிலிருந்து அகற்றப்படாமல் அப்படியே வைக்கப்பட்டிருந்தது.

இப்படி செயற்கை இதயத்துடன் ஒரு வருடத்திற்கும் மேலும் கூட நோயாளாகிளால் வாழ முடியும் என ஹோல்ட்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும் சிறுமி ஒருவர் செயற்கை ரத்த பம்புகளுடன் இத்தனை காலம் வாழ்ந்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

சிம்மன்ஸுக்கு சிறுநீரக கோளாறும் இடையில் ஏற்பட்டது. இதையடுத்து இரண்டாவது இதயம் பொருத்தப்பட்ட பின்னர் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது சிம்மன்ஸ் நலமாக உள்ளார். இருப்பினும் இன்னும் 12 அல்லது 13 ஆண்டுகள் கழித்து அவருக்கு மீண்டும் ஒரு புதிய இதயம் பொருத்தப்பட வேண்டியிருக்கும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

கோமாளியின் சிரிப்பு : ப்பூ .. இதென்ன பிரமாதம் . தமிழ் நாட்டில் இதயமே இல்லாமல் 85 வயது வரை முதலமைச்சர் பதவியில் கூட பல காலம் இருப்பார்கள்.

Friday, November 21, 2008

இந்திய கடற்ப்படையின் சாதனையும், கோமாளியின் வேதனையும்

செய்தி :

நைரோபி: செளதி அரேபியாவின் பிரமாண்ட எண்ணெய் கப்பலை கடத்திச் சென்ற சோமாலிய கடற் கொள்ளையர்கள் இன்று இந்திய கடற்படைக் கப்பலைத் தாக்க முயன்றனர்.

இதையடு்த்து கடற்படை திருப்பித் தாக்கியதி்ல் கொள்ளையர்களின் ஒரு படகு வெடித்துச் சிதறியது. இன்னொரு படகில் இருந்த கொள்ளையர்கள் அதை அநாதையாகவிட்டுவிட்டு கடலில் குதித்து கரை சேர்ந்து தப்பிவிட்டனர்.

சட்டம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு சோமாலியாவில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் இல்லாமல் போய் விட்டது. ஆளாளுக்கு துப்பாக்கியும், கையுமாக திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

அங்கு இருக்கும் பல ஆயுதம் தாங்கிய கும்பல்கள் இப்போது கடலில் அட்டகாசம் புரியத் தொடங்கியுள்ளன. கடற் கொள்ளையர்களாக மாறி இவர்கள் அடுத்தடுத்து கப்பல்களைக் கடத்தி வருகின்றனர்.

ஏடன் வளைகுடா பகுதியில் வரும் கப்பல்களைப் பிடித்து வைத்துக் கொண்டு பெரும் பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர்.

இதையடுத்து இந்தியக் கப்பல்களுக்கு பாதுகாப்பாக அங்கு இந்திய கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் தாபர் ரோந்து சுற்றி வருகிறது.

செளதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் கப்பலான சிரியஸ் ஸ்டாரை கடத்திய கொள்ளையர்கள் நேற்று தாபர் கப்பலை சூழ்ந்தனர்.

இரண்டு படகுகளில் வந்த கொள்ளையர்கள் அதை ராக்கெட்களை வீசி சிதைக்கப் போவதாக மிரட்டியதோடு துப்பாக்கிச் சூடும் நடத்தினர். சில கொள்ளையர்கள் கப்பலுக்குள்ளும் ஏற முயன்றனர்.

இதையடுத்து கடற்படையினர் அந்த படகுகளை நோக்கி பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு படகு வெடித்துச் சிதறி மூழ்கியது. இதைத் தொடர்ந்து இன்னொரு படகிலிருந்த கொள்ளையர்கள் அதிலிருந்து குதித்து தப்பிவிட்டனர்.

முறையான அரசு ஏதும் இல்லாத சோமாலிய நாட்டின் கடற் கொள்ளையர்கள் இப்போது 17 கப்பல்களைப் பிடித்து வைத்துள்ளனர். 339 கப்பல் ஊழியர்களும் இவர்களின் பிடியில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் 2ம் தேதி முதல் ஐஎன்எஸ் தாபர் இந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏடன் வளைகுடா பகுதியில் இதுவரை 35 கப்பல்களை பாதுகாப்பாக கொள்ளையர்களிடம் சிக்காமல் பத்திரமாக அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஒரே ஒரு கப்பலால் இந்தப் பிராந்தியம் முழுவதையும் கண்காணிப்பது சாத்தியமில்லை என்பதால் இதையும் தாண்டி கடத்தல்கள் தொடர்ந்து கொண்டுள்ளன.

கோமாளியின் சந்தேகம் : எல்லாம் சரி . சந்தோசம் . சோமாலியா வரைக்கும் போய் தாக்குதல் நடத்த தெரிந்த இந்திய கடற் படைக்கு அருகில் இருக்கும் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லையே ஏன் ?

Thursday, November 13, 2008

வறுமைக்கு கொடுத்த காவு..

செய்தி :

சென்னை: கணவர் இறந்த பின் உறவினர்களும் உதவிக்கரம் நீட்ட மறுத்ததால், வறுமையில் விரக்தியடைந்த தாய், தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை ஓட்டேரி வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (36). ஆட்டோ டிரைவரான இவர் கடந்த செப்டம்பர் மாதம் உடல் நலமின்றி இறந்தார். இவரது மனைவி மகேஸ்வரி (34), மகள்கள் திலகவதி (16), தீபாவுடன் (13) வசித்து வந்தார். குடும்ப செலவுக்கு போதிய வருமானம் இல்லை. கூலி வேலை செய்தும் ஒரு வேலை உணவு மட்டுமே சாப்பிட முடிந்தது.


குழந்தைகள் பள்ளிக்கு மதிய உணவு கூட எடுத்துச் செல்ல வழியில்லாமல் பசியும், பட்டினியுமாக வாழ்ந்து வந்தனர். மகேஸ்வரியின் பெற்றோர், உறவினர் என யாரும் உதவிக்கரம் நீட்டவில்லை. இதனால், எதிர்காலத்தை எப்படி நகர்த்துவது, இரண்டு பெண்களை எப்படி ஆளாக்குவது என்ற பயம் இவருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, மகேஸ்வரி தனது மகள்களுடன் பேசினார். "கஷ்டப்பட்டு வாழ்வதை விட நிம்மதியாக தற்கொலை செய்து கொள்ளலாம்' என முடிவு செய்துள்ளனர். இரண்டாவது மகளான தீபா தனது அம்மா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார் என அக்கம், பக்கத்தினரிடம் கூறிவிட்டார். "இது போன்று ஏதும் செய்து விட வேண்டாம், நீ வேலைக்கு போனால், குடும்பத்தை காப்பாற்றலாம்,' என அக்கம், பக்கத்தினர் ஆறுதல் கூறினர்.


இந்நிலையில், நேற்று காலை வீட்டின், மின் விசிறியில் மகேஸ்வரியும், அவரது மூத்த மகள் திலகவதியும் துப்பட்டாவால் தூக்கில் தொங்கினர். அதிகாலை எழுந்த தீபா இதை பார்த்து கதறி அழுதார். அக்கம், பக்கத்தினர் வந்து பார்த்தபோது, இருவரும் இறந்து விட்டது தெரிந்தது. ஓட்டேரி போலீசார் இருவரின் பிரேதத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதனிடையே மகேஸ்வரி தனது தாயார் ராஜத்திற்கு எழுதிய கடிதம் ஒன்று போலீசில் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில்,"கணவர் இறந்த பின் நீங்கள் எந்த உதவியும் செய்யாமல் உதாசீனப்படுத்தினீர்கள். தீபாவுக்கு அது போன்று செய்து விடாதீர்கள். தீபாவை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும். எல்.ஐ.சி., பாலிசி போட்டு வைத்துள்ளேன். அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தீபாவை நல்லபடியாக ஆளாக்குங்கள்,' என கடிதத்தில் உருக்கமாக எழுதியிருந்தார். வறுமையால் தாயும், மகளும் தற்கொலை செய்த சம்பவம் ஓட்டேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


என் கருத்தும் வேதனையும் :

இது இன்று நேற்றல்ல இங்கு மட்டும் அல்ல. எங்கும் தொடரும் தொடர்கதை. இதற்கு காரணம் ஆதரவு கரம் நீட்ட மறுத்த, மறந்த உறவுகளும் , நட்புகளும் மட்டும் அல்ல. பெண்களை மேலே படிக்க வைக்காமல் , விரைவில் திருமணம் செய்து வைத்த பெற்றோர்களாலும் , பெற்றோர்களை மறைமுகமாகவும் நேரடியாகவும் தூண்டும் சமுகங்களும் காரணம். வெறும் படிப்பறிவை மட்டும் போதித்து, வாழ்கையை பற்றிய பயத்தை போக்க மறந்து, தன்னம்பிக்கையை கொடுக்க மறந்து, மனித எந்திரங்களை மட்டுமே உற்பத்தி செய்யும் நம் கல்வி கூடங்களும், பல்கலை கழகங்களும் கூட காரணம்.

மத்திய மந்திரிகளை வரவேற்கவும், தன் சுய தம்பட்டங்களுக்கும் கோடி கணக்கில் பணத்தை வாரி இறைத்து விளம்பரம் செய்வோம். ஆனால் ஆதரவற்றவர்களுக்கு உதவும் திட்டங்கள் தீட்டவும் மாட்டோம். இருக்கும் திட்டங்களை பற்றி பொது விளம்பரம் செய்யவும் மாட்டோம் என்ற அலட்சிய மனப்பான்மை கொண்ட அரசும் ஒரு காரணம்.


நாமும் ஒரு காரணம்.

சட்டமில்லா கல்லூரி

அடிக்கிறாங்க அடிக்கிறாங்க என்ன போட்டு அடிக்கிறாங்க..
பார்க்கிறாங்க பார்க்கிறாங்க சுத்தி நின்னு பார்க்கிறாங்க..
விரட்டுறாங்க விரட்டுறாங்க போலிசு முன்ன விரட்டுறாங்க
நிக்கிறாங்க நிக்கிறாங்க கண்டுக்காம நிக்கிறாங்க..

சட்டம் படிக்க காலேஜ் வந்தேன்
விட்டா போதும் ஓடி போறேன்
சட்டம் ஒரு இருட்டறைனு
சரியா சொன்னார் அண்ணாதுரை

பட்ட பகலென்றாலும் பலபேரு பார்த்தாலும்
சட்டம் மட்டும் இருட்டறை

கண்ணு முன்னாடி நடந்தாலும்
காக்க வக்கிலேனா காவல் காப்பவன்
நாக்க புடிங்கிகிட்டு சாகலாமே..
காக்கி உடை எதுக்குன்னு
எங்க ஊரு பெருசு எகத்தாளமா பேசுது..

அத்தை அடிச்சாலோ அல்லிப்பூ செண்டால..
மாமன் அடிச்சானோ மல்லிகப்பூ செண்டால..
என்று ஆராத்தி தூங்கவச்சா என்னோட செல்ல ஆத்தா..
அய்யோ என் புள்ள அய்யோ என் புள்ள..
அழுது துடிதுடிச்ச என்னோட நிலை பார்த்து..

இன்றைய மாணவர்கள் நாளைய நீதிபதிகள்..
கையில் உருட்டு கட்டையுடன்

நாகரீக கோமாளி

நான் ஒரு நாகரீக கோமாளி
என் பேச்சுக்கு எப்போதும் இளி

குண்டக்க மண்டக்க எல்லாம் பேசுவேன்.
ரண்டக்க ரண்டக்க பாட்டும் பாடுவேன்.
குலுங்க குலுங்க சிரிக்கவும் வைப்பேன்.
மூளைக்கு கொஞ்சம் வேலையும் வைப்பேன்.
குழியில் யாரையும் தள்ளவும் மாட்டேன்.

பள்ளியில் படித்தது ஏட்டு சுரக்கா
வாழ்க்கைக்கு தேவை அதிலே இருக்கா
M.Sc படிச்சா என்னோட அக்கா
வேலை இல்லாம வீட்டிலே இருக்கா
கல்யாணம் ஆனா கணவனே முருகா

என்னத்த சொல்ல எல்லாமே இப்படித்தான்.
தொலஞ்சது ஓரிடம் தேடுவது வேறிடம்
படிச்சது ஓரிடம் பிழைச்சது வேறிடம்
பெற்றது ஓரிடம் கொடுப்பது வேறிடம்
உற்றது ஓரிடம் நானிருப்பது வேறிடம்