Monday, November 24, 2008

இதயமில்லாமல் 118 நாட்கள்

செய்தி :

மியாமி: அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், இதயம் இல்லாமல் 118 நாட்கள் வாழ்ந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

இதயத்திற்குப் பதில் அவருக்கு செயற்கையாக ரத்தத்தை பம்ப் செய்து அனுப்பும் சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. இந்த சாதனத்துடன் அவர் 118 நாட்கள் (4 மாதங்கள்) வாழ்ந்துள்ளார்.

அந்த சாதனைச் சிறுமியின் பெயர் டிஸானா சிம்மன்ஸ் ( D'Zhana Simmons). இதற்கு முன்பு, ஜெர்மனியில் ஒரு நபர், செயற்கை ரத்த சுத்திகரிப்பு சாதனத்துடன் 9 மாதங்கள் வாழ்ந்துள்ளார். ஆனால் ஒரு சிறுமி இயற்கையான இதயம் இல்லாமல், இத்தனை நாட்கள் வாழ்ந்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

தெற்கு கரோலினாவைச் சேர்ந்தவர் சிம்மன்ஸ். தனது இதயமற்ற இந்த அனுபவம் குறித்து சிம்மன்ஸ் கூறுகையில், மிகவும் பயமாக இருந்தது இந்த அனுபவம். எப்போது அந்த சாதனம் செயல்படாமல் போகுமோ, நமது உயிர் போகுமோ என்ற பயத்துடன் இருந்தேன் என்றார் சிம்மன்ஸ்.

சிம்மன்ஸுக்கு டைலேட்டட் கார்டியோமயாபதி என்ற இதயக் கோளாறு ஏற்பட்டது. இந்த நோயாளிகளுக்கு, இதயம் பலவீனமாகி விடும். ரத்தத்தை வழக்கமான அளவில் பம்ப் செய்யும் தன்மையை இதயம் இழந்து விடும். வழக்கமான அளவில் சுருங்கி விரியாது.

கடந்த ஜூலை 2ம் தேதி மியாமியில் உள்ள ஹோல்ட்ஸ் குழந்தைகள் மருத்துவமனையில் சிம்மன்ஸுக்கு இதயமாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் புதிதாக பொருத்தப்பட்ட இதயம் செயலிழந்து விட்டது. இதையடுத்து உடனடியாக அந்த இதயம் அகற்ற்பட்டது.

அதன் பின்னர் கலிபோர்னியாவைச் சேர்ந்த தொராடெக் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் தயாரித்த இரு செயற்கை இதய பம்புகள் சிம்மன்ஸுக்குப் பொருத்தப்பட்டன. இந்த செயற்கை இதயத்துடன்தான் இத்தனை காலம் அவர் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில், அக்டோபர் 29ம் தேதி சிம்மன்ஸுக்கு வேறு ஒரு இதயம் பொருத்தப்பட்டது.

செயற்கை இதய பம்புகள் பொருத்தப்பட்ட காலத்தில் சிம்மன்ஸால் நடமாட முடிந்தது. ஆனால் அவர் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டிருந்தார்.

செயற்கை பம்புகள் பொருத்தப்பட்ட போதிலும், அவரது இதயம் உடலிலிருந்து அகற்றப்படாமல் அப்படியே வைக்கப்பட்டிருந்தது.

இப்படி செயற்கை இதயத்துடன் ஒரு வருடத்திற்கும் மேலும் கூட நோயாளாகிளால் வாழ முடியும் என ஹோல்ட்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும் சிறுமி ஒருவர் செயற்கை ரத்த பம்புகளுடன் இத்தனை காலம் வாழ்ந்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

சிம்மன்ஸுக்கு சிறுநீரக கோளாறும் இடையில் ஏற்பட்டது. இதையடுத்து இரண்டாவது இதயம் பொருத்தப்பட்ட பின்னர் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது சிம்மன்ஸ் நலமாக உள்ளார். இருப்பினும் இன்னும் 12 அல்லது 13 ஆண்டுகள் கழித்து அவருக்கு மீண்டும் ஒரு புதிய இதயம் பொருத்தப்பட வேண்டியிருக்கும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

கோமாளியின் சிரிப்பு : ப்பூ .. இதென்ன பிரமாதம் . தமிழ் நாட்டில் இதயமே இல்லாமல் 85 வயது வரை முதலமைச்சர் பதவியில் கூட பல காலம் இருப்பார்கள்.

No comments: