Thursday, November 13, 2008

வறுமைக்கு கொடுத்த காவு..

செய்தி :

சென்னை: கணவர் இறந்த பின் உறவினர்களும் உதவிக்கரம் நீட்ட மறுத்ததால், வறுமையில் விரக்தியடைந்த தாய், தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை ஓட்டேரி வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (36). ஆட்டோ டிரைவரான இவர் கடந்த செப்டம்பர் மாதம் உடல் நலமின்றி இறந்தார். இவரது மனைவி மகேஸ்வரி (34), மகள்கள் திலகவதி (16), தீபாவுடன் (13) வசித்து வந்தார். குடும்ப செலவுக்கு போதிய வருமானம் இல்லை. கூலி வேலை செய்தும் ஒரு வேலை உணவு மட்டுமே சாப்பிட முடிந்தது.


குழந்தைகள் பள்ளிக்கு மதிய உணவு கூட எடுத்துச் செல்ல வழியில்லாமல் பசியும், பட்டினியுமாக வாழ்ந்து வந்தனர். மகேஸ்வரியின் பெற்றோர், உறவினர் என யாரும் உதவிக்கரம் நீட்டவில்லை. இதனால், எதிர்காலத்தை எப்படி நகர்த்துவது, இரண்டு பெண்களை எப்படி ஆளாக்குவது என்ற பயம் இவருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, மகேஸ்வரி தனது மகள்களுடன் பேசினார். "கஷ்டப்பட்டு வாழ்வதை விட நிம்மதியாக தற்கொலை செய்து கொள்ளலாம்' என முடிவு செய்துள்ளனர். இரண்டாவது மகளான தீபா தனது அம்மா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார் என அக்கம், பக்கத்தினரிடம் கூறிவிட்டார். "இது போன்று ஏதும் செய்து விட வேண்டாம், நீ வேலைக்கு போனால், குடும்பத்தை காப்பாற்றலாம்,' என அக்கம், பக்கத்தினர் ஆறுதல் கூறினர்.


இந்நிலையில், நேற்று காலை வீட்டின், மின் விசிறியில் மகேஸ்வரியும், அவரது மூத்த மகள் திலகவதியும் துப்பட்டாவால் தூக்கில் தொங்கினர். அதிகாலை எழுந்த தீபா இதை பார்த்து கதறி அழுதார். அக்கம், பக்கத்தினர் வந்து பார்த்தபோது, இருவரும் இறந்து விட்டது தெரிந்தது. ஓட்டேரி போலீசார் இருவரின் பிரேதத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதனிடையே மகேஸ்வரி தனது தாயார் ராஜத்திற்கு எழுதிய கடிதம் ஒன்று போலீசில் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில்,"கணவர் இறந்த பின் நீங்கள் எந்த உதவியும் செய்யாமல் உதாசீனப்படுத்தினீர்கள். தீபாவுக்கு அது போன்று செய்து விடாதீர்கள். தீபாவை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும். எல்.ஐ.சி., பாலிசி போட்டு வைத்துள்ளேன். அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தீபாவை நல்லபடியாக ஆளாக்குங்கள்,' என கடிதத்தில் உருக்கமாக எழுதியிருந்தார். வறுமையால் தாயும், மகளும் தற்கொலை செய்த சம்பவம் ஓட்டேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


என் கருத்தும் வேதனையும் :

இது இன்று நேற்றல்ல இங்கு மட்டும் அல்ல. எங்கும் தொடரும் தொடர்கதை. இதற்கு காரணம் ஆதரவு கரம் நீட்ட மறுத்த, மறந்த உறவுகளும் , நட்புகளும் மட்டும் அல்ல. பெண்களை மேலே படிக்க வைக்காமல் , விரைவில் திருமணம் செய்து வைத்த பெற்றோர்களாலும் , பெற்றோர்களை மறைமுகமாகவும் நேரடியாகவும் தூண்டும் சமுகங்களும் காரணம். வெறும் படிப்பறிவை மட்டும் போதித்து, வாழ்கையை பற்றிய பயத்தை போக்க மறந்து, தன்னம்பிக்கையை கொடுக்க மறந்து, மனித எந்திரங்களை மட்டுமே உற்பத்தி செய்யும் நம் கல்வி கூடங்களும், பல்கலை கழகங்களும் கூட காரணம்.

மத்திய மந்திரிகளை வரவேற்கவும், தன் சுய தம்பட்டங்களுக்கும் கோடி கணக்கில் பணத்தை வாரி இறைத்து விளம்பரம் செய்வோம். ஆனால் ஆதரவற்றவர்களுக்கு உதவும் திட்டங்கள் தீட்டவும் மாட்டோம். இருக்கும் திட்டங்களை பற்றி பொது விளம்பரம் செய்யவும் மாட்டோம் என்ற அலட்சிய மனப்பான்மை கொண்ட அரசும் ஒரு காரணம்.


நாமும் ஒரு காரணம்.

1 comment:

குடுகுடுப்பை said...

இதற்கு காரணம் நாம் அடுத்தவர் பழி சொல்வார்களோ என்று வாழ்வதுதான்

word verificationa thookunga